Tuesday, November 15, 2011

மாறிவிடு இக்கணம் !

உலகம் திருந்த வேண்டும் என்று
பலவிதமாய் பேசுறோம் !
சுலபமாக்க வேண்டும் என்று
சுற்றி சுற்றி வருகிறோம் !
உலகில் உண்மை இல்லை என்று
ஊரைக் குத்தம் சொல்லுறோம் !
பாரைப் பார்த்து பாழ்மனதை
பாழாக்கிக் கொள்ளுறோம் !
உழைத்து உழைத்து
உண்மை பேசி
தன்னை திருத்திக் கொண்டாலே
தானாய் தரணி திருந்தி விடும்
தந்தை சொன்னார் என்னிடம் !
எந்தை சொல்லில் உள்ள உண்மை
விந்தை உலகில் விரித்திட்டேன் !
கந்தை கட்டிக் கொண்ட மாந்தர்
வெறும் காலில் நடந்து செல்லுறார் !
காரில் செல்லும் மக்களோ
குளிர் போதவில்லை என்கிறார் !
மாற்றம் வேண்டும் மண்ணிலே !
சமத்துவத்தை சொந்த மண்ணில்
சமைக்க வேண்டும் சாரமாய் !
அதற்கு
தன்னை திருத்தி கொள்ளவேண்டும்
தானாய் மாறும் தரணியும் !
தன்னை பெற்ற மனிதரை
தினமும் வணங்க வேண்டுமே!
குழந்தை தவறு செய்திட்டால்
குரைக்க வேண்டாம் வேகமாய் !
திருக்குறளை உவமை சொல்லி
திருத்தவேண்டும் தண்மையாய் !
பாய்க்கு மட்டும் மனையில்லை !
தாயாய் கண்டு வணங்கிடு !
தூய்மை வீட்டில் வேண்டுமே !
தினமும் குளிக்க வேண்டுமே !
குளித்த பின்னர் சிறிது நேரம்
கும்பிட்டு வணங்குவோம் !
தியானம் யோகம் பிராணாயாமம்
திரையில் காட்டும் பொருளல்ல !
மனதில் அமைதி சிறிது போதும்
பணத்தில் வருமோ பக்குவம் ?
பிறர் தன்னை திட்டினாலும்
கண்ணால் முறைத்து பார்க்காமல்
அமைதி தன்னை ஆழ்மனதில்
அழகாய் விதைக்க வேண்டுமே !
பழக தெரிய வில்லை இவர்க்கு,
பார்த்து இரக்கப்படுகிறார் என்று
பாதி உடல் சொன்னாலும்
பழக்கம் அதை மாற்றாமல்
இரக்கம் மனதில் வேண்டுமே !
தரையில் எவரும் பகையில்லை !
கரையில் கொள்கை வாராது !
இரையைத்தேடி தின்றாலும்
பிராணிகள் தன்னினத்தை தின்னாது !
மனிதன் மட்டும் மண்ணிலே
தன்னினத்தை தாழ்த்துறான் !
தனிமனிதன் தன்னை மாற்றி
கனிவை உள்ளம் கொண்டிட்டால்
இனிமையாக அமையும் வாழ்வு !
பனி மலையும் உருகிடும் !
துன்பம் அது வருகையில்
திரையில் காணும் படமென
மனதில் உறுதி கொண்டிடு !
இன்பம் இனிதாய் வருகையில்
சமமாய் பாவம் கொண்டிடு !
பேசி பேசி பொழுதை போக்கி
நாசமாக வேண்டுமோ ?
தினமும் சிறிது நேரத்தை
மெளனமாக கழித்திடு !
மெளனமாக இருக்கையில்
மனதை உள்ளே நோக்கிடு !
“எந்தன் இயல்பு என்னது ? பிறரை
சொந்தமாக நினைக்கிறேனா ?
இல்லை சுமை எனவே எண்ணமா ?
கஷ்டம் பிறர் படுகையில்
கடவுள் நினைப்பு வருகுதா இல்லை
கஷ்டம் வேண்டும் அவருக்கு
என்ன ஆட்டம் போட்டிட்டான் என
மனதில் எண்ணம் வருகுதா ?”
இப்படி
தினமும் சிறிதுநேரம் தன்னை
தன்னை பற்றி நினைத்திட்டால்
விண்ணைத் தாண்டி உலகத்தில்
திண்ணமாக உயரலாம் !
தன்னை திருத்திக் கொள்ளலாம் !
தானாய் உலகம் திருந்திடும் என
தந்தை சொன்ன பொருளதை
சிந்தையிலே கொள்ளுவேன் !
ஊழல் இந்த உலகிலே என
உரக்க குரல் கொடுக்கும் முன்
பரபரக்கும் என் மனதை
பார்த்து பார்த்து மாற்றுவேன் !
பத்து ரூபாய் நோட்டுக்காக
பொய்யை சொல்லும் பழக்கத்தை
போக்கி நின்று பழகுவேன் !
அக்கறையாய் அன்னை தந்தை
அனைவரையும் நோக்குவேன் !
நமக்கும் வயது ஆகிடும் !
நோய்கள் நம்மை முழுங்கிடும் !
அதனால்
வயது முதிர்ந்த வேர்களை
வணக்கம் சொல்லி வாழ்த்துவேன் !
பணமும் காசும் போய்விடும் !
பழக்கம் ஒன்றே நிலைத்திடும் !
தழதழக்க தாயிடம்
தினமும் கொஞ்சி பேசுவேன் !
தந்தை சொல்லும் கருத்தினை
தவறாமல் பழகுவேன் !
மனைவி அவளும் மனுஷிதான் !
மனதினிலே கொள்ளுவேன் !
பிள்ளை அவனை பேசி பேசி
பழக்கிடுவேன் நல்லதில் !
அத்தை பாட்டி அக்கா அண்ணா
உத்தமர்தான் அனைவரும்
உண்மை மனதில் கொள்ளுவேன் !
குறையாய் எதையும் கூறாமல்
குற்றம் என்ன என்னிடம்
சித்த நேரம் எண்ணுவேன் !
என்னை திருத்தி கொண்டிட்டால்
எந்தன் வீடு திருந்திடும் !
எந்தன் வீடு திருந்திட்டால்
பந்தசொந்தம் திருந்திடும் !
சொந்தமெலாம் திருந்திட்டால்
சூழ்ந்த ஊரும் திருந்திடும் !
சூழ்ந்த ஊரும் திருந்திட்டால்
வாழும் நாடு திருந்திடும் !
நாடும் உலகும் திருந்திட
நானும் இன்று திருந்துவேன் !
என் மனதை தினமும் நோக்கி
பக்குவமாய் மாற்றுவேன் !
எந்தன் மனது மாறினால்
எல்லாம் இங்கே மாறிடும் !
கல்லை எறிந்தால் குளத்திலே
களக்கம் வரும் அதனாலே
ஆழமிகுந்த என் மனதை
அமைதியதில் ஆழ்த்துவேன் !
பகைமை தன்னை போக்கியே
தகைமை தண்மை ஆக்குவேன் !
சிகையை அலங்கரிப்பதில்
சீராய் உலகம் ஆகுமோ?
சிந்தை தன்னை மாற்றினால்
விந்தை உலகு விளங்கிடும் !
எந்தை சொன்ன பொருளினை
இன்று உணர்ந்து கொண்டிட்டேன் !
உலகம் மாறி விட்டது !
உண்மை உணர்வில் வந்தது !
நாளை நன்றாய் விடிந்திடும் !
நம்பிக்கை வந்தது !
அம்பிகையைப் பணிந்திட்டேன் !
வம்பு தும்பு அகன்றது !
கம்பு கழியை சுற்றாமல்
கனிவாய் மனது ஆனது !
பணிவாய் நடந்து கொள்ளுவேன் !
மனமே உனக்கு சொல்லுறேன் !
மாறிவிடு இக்கணம் !

No comments:

Post a Comment