Tuesday, November 15, 2011

நம்பிக்கை


நம்பிக்கை கொண்டே நாளுமெழு
நல்லதென எல்லாம் நினவில் வை
சிதராத காரியமாற்ற நம்பிக்கையேதுணை
தீராப்பகை யெனினும் தீயதெண்ணாதே
தீமைகொள்ளும் சிலரையும் சீராக்கு
நம்பிக்கை கொண்டே நாளும் செல்
உன்னில் நீ உன்னைக்காண நம்பிக்கைகொள்
வின்னும் வசப்படும் வளமாய்வாழ‌
இருகண்ணென கடமையில் நம்பிக்கை வை
மனிதனின் மிகப்பெரிய செல்வமென
நம்பிக்கைகொள் அதுவே உனது செல்வம்
நம்பிக்கை உன்னுள் மனதில் வேண்டும்
உலகத்தில் நீ பிறந்ததிலிருந்து விட்டுசெல்லும்வரை
உனது சொத்தே ந‌ம்பிக்கையதை களவு செய்யயியலாது
தன்மீது நம்பிக்கைக் கொண்டோரெல்லாம் சாதனையாளர்

விடியலை தேட்டி நட..!


படபட தடதட எனவரும் இடர்களும்
விடுபட உயிர்பெறவே
கடகட குடுகுடு எனநட தடைகளும்
பொடிபட உடைபடவே
கொடுகொடு பிடிபிடி எனத்துயர் தருபவர்
பகைவரும் எமைவிடவே
நடநட கிடுகிடு எனசெய லெடுகரம்
இணைந்திடு ஒருபடவே
கடகட எனஎழு கனதுள செயவென
திடமுடன் எடுநடையே
இட இட முடிஉன திருகர மிடுசெயல்
முடிவுற எமதுயர்வே
சட சடவெனப்பகை தொடவரில் கொதியுறும்
அனலென எமதிடையே
மடமட எனஎரி மறமுடன் தருமமும்
பெருநெருப் பெனஎழவே
தொடைகடகடவென நடுங்கிய நிலைவிடு
மடைவெள்ளம் உடைபடவே
விடுவிடு எனவரும் அலையென நடைஎடு
எதிரிகள் விடைபெறவே
தொடுதொடு குடையென வளையினும் தொலைவினில்
உளவிரி விண்அருகே
மடுமடு என அல்ல மலையென நிமிர்வரும்
கொடுமைகள் தறிகெடவே
தடுதடு வருமவர் தமிழரை நெருங்கிட
துடிதுடி உனதுடலே
எடுஎடு கொடுகொடு எதிரிகள்நடைபிழன்
றுடைபட விழகுழியே
மடமைகொள் ளவரிடம் எதுவென்ன பகர்வதில்
ஒருபய னெதுவில்லையே
அடிதர வருமவர் அதைவிட உடனிடு
அதைவிட ஒருசெயலே
படுபடு கிடகிட எனவுடல் சரிந்திட
அயர்வுடன் உறங்கிடவே
துடிதுடி என அவன் கொலையிட உறவுகள்
கொடுமையில் வதைபடுமே
விடிவிடி எனவரும் விடியலும் உனதிரு
விழிகளில் தெரிந்திடுமே
அதுவரை விடுவிழி திறஒரு இரவதும்
இலையுன தருகினிலே
சடசட எனஅடி சிறகொடு பறவைகள்
திரிவது உயர்வினிலே
திடமொடு உனதரு கடமையும் குறிதனும்
நிலகொளும் மனதுயர்வே
கடகட எனவருங் கடமைகள் தனை முடி
பெறுவது தமிழரசே
அதுவரை உனதரும் இதயமும் துடிகொள்ளு
விடுதலை கொடுஎனவே

உலகை ஆள

தேர்வு எழுதிய பின்
படித்தது பட்டறிவு!
பட்டறிவு என்பது
வாழ்வுக்கு வழிகாட்டும்
ஆசிரியன்!
படித்துத் தேர்வெழுதித் தேறுவது
படித்தறிவு!
உலகில் முன்னுக்கு வர
பின்னுக்கு நின்று துணைபுரிவது
படித்தறிவே!
ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அதுதாண்டா - நாம்
உலகை ஆள உதவும்!

மாறிவிடு இக்கணம் !

உலகம் திருந்த வேண்டும் என்று
பலவிதமாய் பேசுறோம் !
சுலபமாக்க வேண்டும் என்று
சுற்றி சுற்றி வருகிறோம் !
உலகில் உண்மை இல்லை என்று
ஊரைக் குத்தம் சொல்லுறோம் !
பாரைப் பார்த்து பாழ்மனதை
பாழாக்கிக் கொள்ளுறோம் !
உழைத்து உழைத்து
உண்மை பேசி
தன்னை திருத்திக் கொண்டாலே
தானாய் தரணி திருந்தி விடும்
தந்தை சொன்னார் என்னிடம் !
எந்தை சொல்லில் உள்ள உண்மை
விந்தை உலகில் விரித்திட்டேன் !
கந்தை கட்டிக் கொண்ட மாந்தர்
வெறும் காலில் நடந்து செல்லுறார் !
காரில் செல்லும் மக்களோ
குளிர் போதவில்லை என்கிறார் !
மாற்றம் வேண்டும் மண்ணிலே !
சமத்துவத்தை சொந்த மண்ணில்
சமைக்க வேண்டும் சாரமாய் !
அதற்கு
தன்னை திருத்தி கொள்ளவேண்டும்
தானாய் மாறும் தரணியும் !
தன்னை பெற்ற மனிதரை
தினமும் வணங்க வேண்டுமே!
குழந்தை தவறு செய்திட்டால்
குரைக்க வேண்டாம் வேகமாய் !
திருக்குறளை உவமை சொல்லி
திருத்தவேண்டும் தண்மையாய் !
பாய்க்கு மட்டும் மனையில்லை !
தாயாய் கண்டு வணங்கிடு !
தூய்மை வீட்டில் வேண்டுமே !
தினமும் குளிக்க வேண்டுமே !
குளித்த பின்னர் சிறிது நேரம்
கும்பிட்டு வணங்குவோம் !
தியானம் யோகம் பிராணாயாமம்
திரையில் காட்டும் பொருளல்ல !
மனதில் அமைதி சிறிது போதும்
பணத்தில் வருமோ பக்குவம் ?
பிறர் தன்னை திட்டினாலும்
கண்ணால் முறைத்து பார்க்காமல்
அமைதி தன்னை ஆழ்மனதில்
அழகாய் விதைக்க வேண்டுமே !
பழக தெரிய வில்லை இவர்க்கு,
பார்த்து இரக்கப்படுகிறார் என்று
பாதி உடல் சொன்னாலும்
பழக்கம் அதை மாற்றாமல்
இரக்கம் மனதில் வேண்டுமே !
தரையில் எவரும் பகையில்லை !
கரையில் கொள்கை வாராது !
இரையைத்தேடி தின்றாலும்
பிராணிகள் தன்னினத்தை தின்னாது !
மனிதன் மட்டும் மண்ணிலே
தன்னினத்தை தாழ்த்துறான் !
தனிமனிதன் தன்னை மாற்றி
கனிவை உள்ளம் கொண்டிட்டால்
இனிமையாக அமையும் வாழ்வு !
பனி மலையும் உருகிடும் !
துன்பம் அது வருகையில்
திரையில் காணும் படமென
மனதில் உறுதி கொண்டிடு !
இன்பம் இனிதாய் வருகையில்
சமமாய் பாவம் கொண்டிடு !
பேசி பேசி பொழுதை போக்கி
நாசமாக வேண்டுமோ ?
தினமும் சிறிது நேரத்தை
மெளனமாக கழித்திடு !
மெளனமாக இருக்கையில்
மனதை உள்ளே நோக்கிடு !
“எந்தன் இயல்பு என்னது ? பிறரை
சொந்தமாக நினைக்கிறேனா ?
இல்லை சுமை எனவே எண்ணமா ?
கஷ்டம் பிறர் படுகையில்
கடவுள் நினைப்பு வருகுதா இல்லை
கஷ்டம் வேண்டும் அவருக்கு
என்ன ஆட்டம் போட்டிட்டான் என
மனதில் எண்ணம் வருகுதா ?”
இப்படி
தினமும் சிறிதுநேரம் தன்னை
தன்னை பற்றி நினைத்திட்டால்
விண்ணைத் தாண்டி உலகத்தில்
திண்ணமாக உயரலாம் !
தன்னை திருத்திக் கொள்ளலாம் !
தானாய் உலகம் திருந்திடும் என
தந்தை சொன்ன பொருளதை
சிந்தையிலே கொள்ளுவேன் !
ஊழல் இந்த உலகிலே என
உரக்க குரல் கொடுக்கும் முன்
பரபரக்கும் என் மனதை
பார்த்து பார்த்து மாற்றுவேன் !
பத்து ரூபாய் நோட்டுக்காக
பொய்யை சொல்லும் பழக்கத்தை
போக்கி நின்று பழகுவேன் !
அக்கறையாய் அன்னை தந்தை
அனைவரையும் நோக்குவேன் !
நமக்கும் வயது ஆகிடும் !
நோய்கள் நம்மை முழுங்கிடும் !
அதனால்
வயது முதிர்ந்த வேர்களை
வணக்கம் சொல்லி வாழ்த்துவேன் !
பணமும் காசும் போய்விடும் !
பழக்கம் ஒன்றே நிலைத்திடும் !
தழதழக்க தாயிடம்
தினமும் கொஞ்சி பேசுவேன் !
தந்தை சொல்லும் கருத்தினை
தவறாமல் பழகுவேன் !
மனைவி அவளும் மனுஷிதான் !
மனதினிலே கொள்ளுவேன் !
பிள்ளை அவனை பேசி பேசி
பழக்கிடுவேன் நல்லதில் !
அத்தை பாட்டி அக்கா அண்ணா
உத்தமர்தான் அனைவரும்
உண்மை மனதில் கொள்ளுவேன் !
குறையாய் எதையும் கூறாமல்
குற்றம் என்ன என்னிடம்
சித்த நேரம் எண்ணுவேன் !
என்னை திருத்தி கொண்டிட்டால்
எந்தன் வீடு திருந்திடும் !
எந்தன் வீடு திருந்திட்டால்
பந்தசொந்தம் திருந்திடும் !
சொந்தமெலாம் திருந்திட்டால்
சூழ்ந்த ஊரும் திருந்திடும் !
சூழ்ந்த ஊரும் திருந்திட்டால்
வாழும் நாடு திருந்திடும் !
நாடும் உலகும் திருந்திட
நானும் இன்று திருந்துவேன் !
என் மனதை தினமும் நோக்கி
பக்குவமாய் மாற்றுவேன் !
எந்தன் மனது மாறினால்
எல்லாம் இங்கே மாறிடும் !
கல்லை எறிந்தால் குளத்திலே
களக்கம் வரும் அதனாலே
ஆழமிகுந்த என் மனதை
அமைதியதில் ஆழ்த்துவேன் !
பகைமை தன்னை போக்கியே
தகைமை தண்மை ஆக்குவேன் !
சிகையை அலங்கரிப்பதில்
சீராய் உலகம் ஆகுமோ?
சிந்தை தன்னை மாற்றினால்
விந்தை உலகு விளங்கிடும் !
எந்தை சொன்ன பொருளினை
இன்று உணர்ந்து கொண்டிட்டேன் !
உலகம் மாறி விட்டது !
உண்மை உணர்வில் வந்தது !
நாளை நன்றாய் விடிந்திடும் !
நம்பிக்கை வந்தது !
அம்பிகையைப் பணிந்திட்டேன் !
வம்பு தும்பு அகன்றது !
கம்பு கழியை சுற்றாமல்
கனிவாய் மனது ஆனது !
பணிவாய் நடந்து கொள்ளுவேன் !
மனமே உனக்கு சொல்லுறேன் !
மாறிவிடு இக்கணம் !

சிலந்தியும் நாமும்! விழு, எழு!


பாட்டெதற்குப் பாடியே பரமனவர் பட்டதனை
பாவிநான் மறக்கலாமோ
போட்டுடைத்து ஆடிப்பெரும் பூமியில் புயலடிக்க
பூமலர்கள் தூவலாமோ
ஏட்டெதற்கு என்றெழுதி இதயம் கனத்துவிட
இன்னுமே எழுதலாமோ
நீட்டியொரு பாய்விரித்து நிமிர்ந்து படுத்துமனம்
நிம்மதியைக் காணுமாமோ
நாடெதற்கு நாயுடனே நரிகள் அரசுகொள்ள
நானெதற்கு என்னலாமோ
வீடெதற்கு என்றவனோ விறகாய் கொழுத்திவிட
விட்டுமோடிச் செல்லலாமோ
ஆடெதற்கு என்றவரும் அறுத்துக் கறிசமைக்க
ஆகா ருசி என்னலாமோ
வேடமிட்டு சூழ்ந்துவந்து வேதனை விளைப்பவனை
வேடிக்கையென் றெண்ணலாமோ
தோலுரித்து வெயிலில் துடிக்க விரிப்பவனைத்
தோழனென்று கொள்ளலாமோ
நாலுபேரைத் தூக்கவிட்டு நடுவில் படுக்கவைக்க
நாமும்சரி என்னலாமோ
வாலிருக்க தீயைவைத்து வந்திருந்த தூதனையும்
விட்டுவைத்த தீதுயாரோ
காலிருக்க ஒடியவன் கனத்த அனல்எரித்துக்
கண்டநிலம் தீயுதாமோ
வேலிருக்க என்னபயம் வென்றுவிடு என்றவனும்
வீதியிலே நிற்கலாமோ
கோலிருக்கு ஆளுங்குடை கொண்டிருக்கு என்றவுடன்
கோவிலும் பறிக்கலாமோ
ஆலிருக்கு அரச மரமிருக்கு என்றவுடன்
அந்த இடம் புத்தமாமோ
வேலிருக்கு வேம்புடனே வேங்கையும் பரந்திருந்தால்
விட்டுஓடிச் செல்லுவாரோ
கூழிருக்கு சோறுகஞ்சி குடித்துப் படுத்தமண்ணை
கூலிபெற்று விற்கலாமோ
தோழிருக்கு மீசைஇன்னும் துடித்து உணர்விருக்க
தோல்விஎன்று சொல்லலாமோ
ஆளிருத்தி வாழ்வழித்து அவலமிடப் பொறுத்து
ஆக இன்னும் தூங்கலாமோ
நாளிருக்கு நமக்கில்லை நாமிருப்ப தூரமென
நாஒறுக்க ஊமையாமோ
ஏழிருக்கு ஏழரையில் ஏறியேசனியிருக்க
எல்லாம்விதி என்பதாமோ
ஊழிருக்கு செய்தவினை உற்றழியகாலமிது
ஒன்றும்பயன் இல்லையென்பதோ
நூலுடன் சிலந்திவலை நாலுதரம் வீழ்ந்தெழுந்து
நெய்தகதை நீபடித்தையோ
போலிருக்கு பூமிதனில் புன்மைதரும்வாழ்வு நீயும்
போயெழுந்து தீரம் கொள்வையோ

சின்னாள் ஆகிறியா? பெரியாள் ஆகிறியா?

பால் பருக்கிச் சோறு ஊட்டிவிடத்தான்
பெற்றவர்களால் முடியுமென்பதால்
வேளாவேளைக்கு
பள்ளிக்கூடம் அனுப்புவது
அகரம் தொட்டு
கருவி(ஆயுதம்) வரை படிக்கத்தானே!
என்னதான் இருந்தாலும் பாருங்கோ...
பள்ளிக்கூடம் போனோம் வந்தோம்
படித்தோமோ என்றால் இல்லைப் பாரும்
நீங்கள் அல்ல நான் தான்!
பள்ளிக்கூடக் காலம் முடிஞ்ச பிறகு தான்
வயிற்றுப் பிழைப்புக்கு உழைப்பைத் தேடினால்
வழி நெடுகப் பிச்சை எடுப்பதே
தொழிலானதால்
கண்டதெல்லாம் கண்ணை மூடியே
கற்றுத் தேறியதாலே
நாற்காலித் தொழில் எல்லோ
எனக்குக் கிடைத்தது என்பேன்!
என்னதான் இருந்தாலும் பாருங்கோ...
பள்ளிக்கூடப் படிப்பை
ஒழுங்காகப் படித்து முடித்திருந்தால்
இன்றைக்கு நானோ உலகத்தில் பெரியன்!
கொஞ்சம் நினைத்துத் தான் பாருங்கோ...
பிச்சை எடுக்கையிலே படிக்க முடிந்ததால்
இன்றைக்கு நானோ ஊருக்குள்ளே சிறியன்!
'கல்வி' என்பது
தொடக்க காலத்தில் புளிக்கத்தான் செய்யும்
முற்றிய காலத்தில் இனிக்கத்தான் செய்யும்
பட்டுத் தெளிந்த
என்னைப் போன்றோருக்கு
நன்றாகத் தெரிந்த உண்மை இது!
என் இனிய இளைய நெஞ்சங்களே...
பிஞ்சில படிக்கப் புளிக்குமென
கல்வியை
முளையிலேயே கிள்ள நினைக்காதீர்கள்!
எனது அருமை மாணவிகளே... மாணவர்களே...
என் போன்ற பழுத்த கிழங்கள்
உமக்கு உரைப்பது
தாங்கள் செத்தாலும்
நீங்கள் நல்லாயிருக்கத் தான் பாருங்கோ!
பள்ளிக்கூடம்
படிக்கப் போகும் பிள்ளைகளே...
எட்டாப் பழம் புளிக்குமென
கல்வியை விட்டு எட்ட விலகாதீர்கள்...
என்னைப் போல
நாய்படாப் பாடுபட்டோர்
கதைகள் கேட்டுமா படிப்புக்குப் பின்னடிப்பு!
என்னகாணும் வருங்காலச் செல்வங்களே...
சின்னாள் ஆகிறியா? பெரியாள் ஆகிறியா?
சின்னஞ்சிறு அகவையிலே
முடிவு செய்யுங்கள் - அம்முடிவே
"வினை விதைத்தவன் வினை அறுப்பான்" என்பதை
உங்களுக்கு நினைவூட்டக் காத்திருக்கிறதே!

எட்டிப் பிடிக்கலாம்

நிலவு
தேய்ந்தாலும் வளர்ந்தாலும்
வெண்மை தான்
ஆனால்
மனிதன்
சோர்வு(நட்டம்) அடைந்தாலும்
தேட்டம்(இலாபம்) அடைந்தாலும்
தன்னை நிலையாகப் பேணுவதில்லையே!
கருமுகில்
மூடிமறைத்தாலும் ஓடிவிலகினாலும்
வானம் எப்பவும் நீலமே
ஆனால்
மனிதன்
குறுக்கீடுகள் வந்தாலும் போனாலும்
துயர் அடைவது ஏன்?
இயற்கையில்
எத்தனை மாற்றங்கள் வரினும்
தன் இயல்பை இழப்பதில்லையே
ஆனால்
மனிதன்
வாழ்க்கையில்
தன்னைக் குறைத்து மதிப்பிடுவது
நல்லதிற்கு இல்லைப் பாரும்!
வீசும் காற்றைக் கூட
மரங்கள்
எதிர்த்து நின்று
நிமிர்ந்து நிற்கிறதே
ஆனால்
மனிதன்
வாழ்க்கையில் எது வந்தாலும்
முகம் கொடுத்து
எதிர்த்து நின்று வாழ
அஞ்சுவதேன்!
தன்னம்பிக்கை இருந்தால்
எந்த
நன்னம்பிக்கை முனையையும்
கடக்கலாம் வாருங்கள்...
எதிர்த்து நின்றால்
எதிர்க்க வந்தவை - உங்களுக்கு
அஞ்சி ஓடுவதைப் பாருங்கள்...
துணிந்துவிட்டால்
மனிதா
உலகமே
உனக்கு ஒரு தூசு...
எதற்கும்
பணிந்துவிடாமல்
மனிதா
முயன்று பார்
எட்டிப் பிடிக்கலாம்
உனக்கு முன்னாலே
போய்க் கொண்டிருக்கும்
வெற்றிகளைக் கூட...
வெற்றிகளுக்குக் கிட்ட
நெருங்கிவிட்டால்
மனிதா
தோல்விகள்
ஒருபோதும் உன்னை நாடாதே!